பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியம் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலிருந்தே விக்கெட்களை பறிக்கொடுத்து தடுமாறியது. இறுதியில் இலங்கை அணி 46.4 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இலங்கை அணியின் குஷல் பெரேரா மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 51 ரன்கள் எடுத்த அவர் ஐந்தாவது விக்கெட்டாக வீழ்ந்தார். அதற்கு முன்பாகவே 8.2 ஓவர்களுக்கு எல்லாம் நான்கு விக்கெட்களை இழந்தது அந்த அணி. இலங்கையின் முன்னணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, தீக்சனா மட்டும் இறுதிக்கட்டத்தில் 38 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்து தரப்பில் ட்ரெண்ட் பவுல்ட் 3 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர், 172 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுத்தனர் தொடக்க வீரர்களான ரச்சின் ரவீந்திராவும், டெவான் கான்வேவும். அணியின் ஸ்கோர் 86 ரன்களை எட்டியபோது இந்தக் கூட்டணி பிரிந்தது. 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கான்வே முதல் விக்கெட்டாக வெளியேறினார்.

இதன்பின் 42 ரன்கள் எடுத்த ரச்சின் ரவீந்திராவும் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல் 43 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவ, இறுதியில் நியூஸிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். நடப்பு தொடரில் நியூஸிலாந்து பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும். அதேநேரம், இலங்கை பெறும் 7-வது தோல்வி இதுவாகும்.