உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 | இரட்டை சதம் அடித்த மேக்ஸ்வெல்: ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்ற ஆஸ்திரேலிய அணி..!

2 Min Read
மேக்ஸ்வெல்

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி களத்தில் போராடி வெற்றியை வசமாக்கி உள்ளது. குறிப்பாக அந்த அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் தனி ஒருவராக களத்தில் நின்று ‘பிக் ஷோ’ காட்டி இருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான், 143 பந்துகளில் 129 ரன்கள் எடுத்திருந்தார். ரஷித் கான் 35 ரன்கள் எடுத்திருந்தார். ரஹ்மத் ஷா 30 ரன்கள், ஹஷ்மதுல்லா ஷாய்தி 26 ரன்கள், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 22 ரன்கள் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்திருந்தனர்.

மேக்ஸ்வெல்

292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 91 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா. டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஜோஷ் இங்லிஸ், லபுஷேன், ஸ்டாய்னிஸ், ஸ்டார்க் ஆகியோர் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அந்த சூழலில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 201 ரன்கள் தேவைப்பட்டது. கையில் இருந்தது 3 விக்கெட்கள். களத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை அளித்த ஒரே பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல். அவர் அதனை வீண் போக செய்யவில்லை. 128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். நூர் அகமது வீசிய 21.5-வது ஓவரில் மேக்ஸ்வெல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்தார் முஜீப். அது ஆப்கன் அணியின் வெற்றியை பறித்தது.

மேக்ஸ்வெல்

தசை பிடிப்பு காரணமாக களத்தில் கால்களை நகர்த்த முடியாமல் தவித்தார் மேக்ஸ்வெல். ஒரு கட்டத்தில் அப்படியே முடியாமல் படுத்தும் விட்டார். இருந்தும் அதை பொறுத்துக் கொண்டு அபாரமாக ஆடி அதகளம் செய்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா நடப்பு உலகக் கோப்பை தொடரில் 3-வது அணியாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. மேக்ஸ்வெல் மற்றும் கம்மின்ஸ் இணைந்து 202 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்

Share This Article
Leave a review