உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 | பென் ஸ்டோக்ஸ் அபாரம் – இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி..!

2 Min Read
பென் ஸ்டோக்ஸ்

புனே:உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.

- Advertisement -
Ad imageAd image

புனேவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்தப் போட்டியிலும் இங்கிலாந்தின் ஓப்பனிங் சொதப்பியது. ஜானி பேர்ஸ்டோ 15 ரன்களிலும், ஜோ ரூட் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். என்றாலும், டேவிட் மலான் மற்றும் பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. பொறுப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். 87 ரன்கள் எடுத்த நிலையில் மலான் ரன் அவுட் செய்யப்பட்டார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்தின் நடுவரிசை வீரர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர்.

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் உடன் கிறிஸ் வோக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கிறிஸ் வோக்ஸ் 51 ரன்கள் எடுத்து வெளியேற ஸ்டோக்ஸ் சதம் கடந்த நிலையில் 108 ரன்களில் ஆட்டம் முடியும் தருவாயில் விக்கெட்டானார். இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது.

340 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய நெதர்லாந்து அணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 38 ரன்களும், வெஸ்லி பரேசி 37 ரன்களும், சைப்ரண்ட் 33 ரன்களும், தேஜா 41 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து பவுலர்கள் துல்லியமாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ, நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து சார்பில் அதில் ரஷித், மொயின் அலி தலா 3 விக்கெட்டும், டேவிட் வில்லி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். அதேநேரம், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து 4வது அணியாக வெளியேறியது நெதர்லாந்து. இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

Share This Article
Leave a review