புதுடெல்லி: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்களதேச அணிகள் மோதின. இப்போட்டியில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது வங்களதேச அணி. ஆறு போட்டிகளுக்கு பிறகு வங்கதேச அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்களதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் 279 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி சார்பாக அசலங்கா 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேத்யூஸ் டைம்டு அவுட் முறையில் வெளியேற்றப்பட்டார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டைம்டு அவுட் முறையில் ஒருவர் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும்.

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்களதேசம் அணி விரட்டியது. இந்த தொடரில் விளையாடிய வங்களதேசம் அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து, நியூஸிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை மட்டுமே தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்தது வங்களதேசம் அணி.
வங்களதேசம் அணி தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளிக்க, பின்னர் களமிறங்கிய நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ மற்றும் ஷகிப் அல் ஹசன் இணைந்து அபார கூட்டணி அமைத்தனர். இருவரும் 169 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். ஷகிப், 65 பந்துகளில் 82 ரங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 101 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஷாண்டோ. இறுதியில் 41.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது வங்களதேசம் அணி. சிறப்பாக விளையாடிய ஷகிப் அல் ஹசன், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.