- கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவில் உள்ள மலை அடிவார கிராமங்களில் சட்டவிரோதமாக மண் எடுக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் தாலுகாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் உள்ள மதுக்கரை, ஆலந்துரை, வெள்ளிமலை உள்ளிட்ட கிராமங்களில், சட்ட விரோதமாக செம்மண் எடுக்கப்படுவது குறித்து வழக்கறிஞர் எம் புருஷோத்தமன், வீடியோ ஆதாரங்களுடன், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் முறையிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நிலையில், கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கு அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கனிமவளத்துறை உதவி இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையில், மண் எடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியது வெறும் கண்துடைப்பு என்று அதிருப்தி தெரிவித்தனர்.
வழக்கறிஞர் புருஷோத்தமன் தரப்பில் காட்டப்பட்ட வீடியோவில் இருந்து எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பெருமளவில் செம்மண் எடுக்கப்பட்டு இருப்பது நிரூபணம் ஆகிறது என தெரிவித்த நீதிபதிகள், இதை அனுமதித்தால் மேற்கு தொடர்ச்சி மலையே காணாமல் போய்விடும் என்றும் நிலச்சரிவு அபாயம் ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.
மணல் எடுக்கப்படுவதால் உருவாகும் குழிகளில் யானைகள் போன்ற விலங்குகள் விழும் அபாயம் உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இந்தப் பகுதியில் அரசு மற்றும் பட்டா நிலங்களில் மண் எடுக்க தடை விதித்தும், இப்பகுதிகளில் மண் எடுக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மண் எடுப்பது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இது சம்பந்தமான வழக்கை சிபிஐ போன்ற வேறு புலனாய்வு அமைப்புகள் வசம் ஒப்படைக்க வேண்டி வரும் என எச்சரித்த நீதிபதிகள், சட்ட விரோதமாக மண் எடுப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.