ஊட்டியில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை, கை விலங்கு போட்டு அழைத்து சென்றதாக எழுந்த சர்ச்சை பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த, 15 வயது சிறுமி வாலிபர் ஒருவர் திருமணம் செய்ததாக வந்த புகாரில், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி அவர்கள், நவம்பர் 2ல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். சிறுமியை காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 7ல் கோத்தகிரி கோர்ட்டில் வாக்குமூலம் அளிப்பதற்காக பெண் போலீஸ் ஜமுனா, சிறுமியை கை விலங்குடன் கோத்தகிரி கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றார் என்ற தகவல்கள் பரவியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பெண் போலீசார் என்னை கைவிலக்கு போட்டு அழைத்துச் சென்றனர் என பேசிய வீடியோ வெளியானது. இது குறித்து சிறுமியின் தாய் கடந்த 16ல் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். விசாரணைக்கு எஸ்.பி உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே நீலகிரி எஸ்.பி சுந்தரவடிவேல், சி.சி.டி.வி கேமரா ஆதாரங்களை கண்டுபிடித்து, நேற்று நிருபர்களின் கூறியதாவது;
கடந்த 16 ஆம் தேதி சிறுமியின் தாய் எஸ்.பி அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒரு புகார் கொடுத்தார். அதில் சில நாட்களுக்கு முன் கோத்தகிரி கோர்ட்டுக்கு என் மகளை பெண் போலீஸ் ஒருவர் அழைத்துச் சென்ற போது அவருக்கு கை விலங்கு போட்டு அழைத்துச் சென்றுள்ளார் என குற்றம் சாட்டி இருந்தார். உடனே ஊட்டி டவுன் டி.எஸ்.பி யசோதா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டேன். சிறுமியிடம் நேரடி விசாரணை நடத்திய போது, சிறுமி, கை விலங்கு போடவில்லை என மறுப்பு தெரிவித்தார்.

சிறுமியை அழைத்துச் சென்ற போது பதிவான சி.சி.டி.வி கேமரா மற்றும் சில வீடியோக்களை முழுமையாக ஆய்வு செய்து விட்டோம். அதில் சிறுமிக்கு கை விலங்கு போடவில்லை என்பது உறுதியாகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.