வாகனம் வாங்கிய நாள் முதல் தொடர் பழுதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, மன உளைச்சலுக்கு 20 ஆயிரம் ரூபாயுடன், வாகனம் வாங்கிய தொகை 61,968 ரூபாயை சேர்த்து, டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் வழங்க வேண்டும் என, சென்னை தெற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் தாக்கல் செய்த மனு: ” கீழ்கட்டளையில் உள்ள மகாலட்சுமி மோட்டார்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு, 2019 செப்.,19ல், 61 ஆயிரத்து 968 ரூபாய் விலையில் ‘டி.வி.எஸ். ஸ்போர்ட் ஈ.எஸ் பிளாக் சில்வர்’ என்ற மாடல் இரு சக்கர வாகனம் வாங்கினேன்.
இரு சக்கர வாகனத்தை, எனக்கு 23ம் தேதி வழங்கினர். இரண்டு நாளுக்கு பின், 25ம் தேதி வாகனத்தை இயக்க முயற்சித்தும், ‘ஸ்டார்ட்’ ஆகவில்லை. புகார் அளித்ததும் வீட்டுக்கு வந்த மெக்கானிக், பழுதை சரி செய்துவிட்டு சென்றார்.
அன்றைய தினம் மாலையே மீண்டும் வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை. பல முறை, இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொண்டேன். வாகனம் ஸ்டார்ட் ஆவதில் பிரச்னை நீடித்தது.
பின் வாகன தயாரிப்பு குறைபாடு என அறிந்து, 2019 செப்.29ல் மின்னஞ்சல் அனுப்பினேன். பழுதை நீக்க வாகனத்தை ஷோரூம் எடுத்து சென்றனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் பழுதை சரிசெய்து வாகனத்தை திருப்பி தரவில்லை.
வாகனம் வாங்கி 17 நாட்களுக்கும் பின்னும் வாகனத்தை பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்தது. ஒவ்வொரு முறையும் பழுதுக்கு புது புது காரணங்களை தெரிவித்தனர். எனவே, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் ” , இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவகுமார், எஸ். நந்தகோபாலன் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர், வாகனத்தை விற்பனை செய்த நிறுவன பணிமனையில் விட்டு சென்றும், பழுதை சரி செய்து இன்னும் வழங்கவில்லை.
வாகனத்தின் விலையைத் திருப்பித் தர, நிறுவனங்கள் ஒப்புக்கொண்டபோதும், வாகனம் உற்பத்திக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டது என்பதை, புகார்தாரர் நிரூபிக்கத் தவறிவிட்டார் என, அவர்கள் கூறும் வாதம் ஏற்புடையதல்ல. அதேபோல உரிய நடைமுறைகள் படி வாகனம் இயக்கப்படவில்லை என்ற வாதமும் ஏற்புடையதல்ல. ஏனெனில் வாகனத்தை வாங்கியது முதல் பல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/product-defect-consumer-court-orders-hp-computer-company-to-pay-compensation-within-two-weeks/
எனவே, சேவை குறைபாடுடன் செயல்பட்டதால் வாகனத்துக்கான தொகை 61,968 ரூபாயை, ஒன்பது சதவீத வட்டியுடனும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 20 ஆயிரமும், வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாயும், மனுதாரருக்கு டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனி, மகாலட்சுமி மோட்டார்ஸ் வழங்க வேண்டும்.