இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனை பஸ்சில் ஏற்ற அனுமதி மறுத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய பேருந்து நடத்துனர் ராஜாவை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் சச்சின் சிவா (எ) சிவகுமார் . இவர் பிறந்த 6 மாதத்திலேயே போலியோவால் கால் பாதிக்கப்பட்டு சரியாக நடக்க முடியாமல் போனது.
சிறுவயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வந்தார். பள்ளி, கல்லூரி என தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்த சச்சின் சிவாவிற்கு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் பற்றி 2013-ல் தெரியவந்தது. இதனையடுத்து தனது சொந்த முயற்சியால் தமிழக அணியில் இடம்பிடித்த சிவா, குறுகிய காலத்திலேயே தமிழக அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றார். இதனையடுத்து 2016ஆம் ஆண்டு இந்திய மாற்றுத்திறனாளிகள் அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இவரது சிறப்பான ஆட்டத்தால் 2019ஆம் ஆண்டு வைஸ் கேப்டனாக உயர்ந்தார். பின்பு 2022 ஆம் ஆண்டு முதல் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் .
இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று (ஏப்.18) தேதி இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி கொண்ட அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்தில் பயணம் செய்வதற்காக ஏறியுள்ளார்.
அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை பயன்படுத்தி பயணம் செய்ய அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார்.

அப்போது சச்சின் சிவா, இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என பதிலளத்துள்ளார். அதற்கு, நடத்துநர் சிவாவிடம் ‘மூஞ்சிய உடைச்சிடுவேன். எனக்கு எல்லாம் தெரியும்’ என கூறி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து கேட்டபோது, ‘அப்படித்தான் பேசுவேன் உன்னை வண்டியில் ஏற்ற முடியாது’ எனக்கூறி வண்டியில் ஏற்றுவதற்கு மறுத்துததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவா கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அதே பேருந்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதற்கு அந்த நடத்துனர், ‘நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது” என அலட்சியமாக பேசி மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பேருந்து நடத்துநர் ராஜாவை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.