கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்தாலும் அதை சமாளிக்க கூடிய வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் கடந்து சில நாட்களாக அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையில் குறித்து அனைத்து தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி கலந்து கொண்டார்.

பொதுமக்களுக்கு கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து துணை மின் நிலையங்களிலும் வருகின்ற மே 31ஆம் தேதி வரை மின்தடை எதுவும் எடுக்க வேண்டாம் என்று அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுருத்தி இருக்கிறார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மின் தேவை அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக 2023-24 உச்சமின் தேவை ஏப்ரல் மே மாதத்தில் அதிகரித்துள்ளது. அதேபோல கோடை காலத்துக்கு முன்பாக முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றார்.
மேலும் சென்னையின் மின் தேவை கூடுதலாக அதிகரித்திருக்கிறது. சென்னைக்கு சிறப்பு கவனம் செலுத்த ஆய்வு கூட்டம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோடை காலத்தில் எவ்வளவு மின் தேவை அதிகரித்தாலும் அதை சமாளிக்க கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மின்சார வாரியம் எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் மின் தேவையை விட அதிக மின் தேவை சென்னையில் மட்டும் பதிவாகிறது. இருப்பினும் தங்கு தடை என்று மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.