தனிப்பட்ட முறையில் எம் ஜி ஆருக்கு நெருங்கியத் தோழராக, சகோதரராகத் திகழ்ந்தவர் ஆர்.எம்.வீ – திருமாவளவன் இரங்கல்

2 Min Read

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் ஐயா ஆர்.எம்.வீ மறைவுக்கு திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேனாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் மறைவெய்திய செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைந்தோம். நூறு அகவை காண்பார் என நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் திடுமென அவரது மறைவு செய்தி வந்து நெஞ்சை உலுக்கி விட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு ஆர்.எம்.வீரப்பன் , தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தற்போதைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் என எல்லோரோடும் நெருங்கிப் பழகியவர். தான் இறக்கும் நேரம் வரை திராவிட இயக்கப் பற்றாளராகவே வாழ்ந்தவர். தந்தை பெரியாரிடத்தில் உதவியாளராகச் சேர்ந்து திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனத் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர். அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு எம்ஜிஆர் கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்து விலகி வாழ்ந்து வந்தார். எனினும் தன்னை ஒரு திராவிட அரசியலராகவே அடையாளப்படுத்திக் கொண்டார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் காலமானார்

சட்ட மேலவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து முறை அமைச்சர் பதவிகளை வகித்தவர். திரு எம் ஜி ஆர் அவர்களின் அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அவரது கட்சியில் ஒரு தலைவராக மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் எம் ஜி ஆருக்கு நெருங்கியத் தோழராக, சகோதரராகத் திகழ்ந்தவர்.

ஜெயலலிதா அமைச்சர் பொறுப்பில் இருந்தும் அதிமுகவிலிருந்தும் நீக்கி வைக்கப்பட்ட பிறகு எம்ஜிஆர் கழகம் என்ற அமைப்பைத் துவக்கி செயல்பட்டவர். அவர் வகித்த பொறுப்புகளில் திறம்படச் செயல்பட்டவர்.

அரசியலில் கடும் உழைப்புக்கும், அறிவார்ந்த உத்திகளை வகுப்பதற்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். தமிழ் மொழி, தமிழ்நாடு என எப்போதும் பொது நலனில் அக்கறை கொண்டிருந்த ஐயா ஆர்.எம்.வீ மறைவு இனப்பகை சூழ்ந்த இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பாகும். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத்தினருக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
1 Review