திருமணம் முடிந்த கையோடு புதுமணப்பெண் இயற்பியல் செய்முறை தேர்வில் கலந்து கொள்ள வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மெய்காவல்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் பவானி மகள் இந்துமதி (21) என்பவர் தனியார் கல்லூரியில் எம் .எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது பெற்றோர் இந்துமதிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ராஜேந்திர சோழகன் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மங்கையகரசி, இவர்களின் மகன் சுதர்சன் – இந்துமதிக்கும் இன்று காலை 9 மணி முதல் 10 30க்குள் திருமணம் நடைபெற்றது.

இதே நாளில் எம் எஸ் சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் செய்முறை தேர்வு தொடங்கியது. இதனால், திருமணம் முடிந்த கையோடு செய்முறை தேர்வில் கலந்து கொள்ள தனது கணவர் மற்றும் பெற்றோரிடம் கூறியிருந்தார்.
அதன்படி மணமகன் தாலிகட்டி முடித்ததும் திருமண கோலத்தில் இந்துமதி கல்லூரிக்குச் சென்று தேர்வு எழுதினார். இதுகுறித்து அளித்த இந்துமதி பெற்றோர்கள் பேட்டியில், “எனது மகள் இந்துமதி திருமணத்திற்கு தயாரான போதும் தேர்வுக்கு நன்றாகப் படித்தாள். எங்களுக்கும் உறுதுணையாக இருந்த என் மாப்பிள்ளை, மற்றும் குடும்பத்தினர்களுக்கு மற்றும் உறவினர்கள், ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.