ஒரு நாட்டில் ஒரு குழுவினருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கும் ஐரோப்பா கண்டத்தின் மொனாக்கோ நாட்டில் நடக்கும் சர்வதேச எரிசக்தி படகு போட்டிக்கு கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
உலகம் முழுவதும் அதிகப்படியான ஏற்றுமதி, இறக்குமதி போன்ற வர்த்தகம் என்பது கப்பலில் நடந்து வருகிறது.குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருளில் கப்பல் இயங்குவதால் கடல் வளத்தில் அதிகமாக பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களும் கூட அழிந்து போகிறது.
இந்த பாதிப்பை தடுக்கும் பொருட்டு உலகம் முழுவதும் இருக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களை வழக்கமான எரிசக்தியை பயன்படுத்தாமல் பேட்டரி , சோலார் போன்ற மாற்று எரிசக்தி மூலம் இயங்கும் படகுகளை உருவாக்க மொனாக்கோ நாட்டு அரசு ஊக்குவித்து ஆண்டுதோறும் சர்வதேச ஆற்றல் படகு போட்டி நடத்தி வருகிறது. இப்படியே மாணவர்களும் புதிது புதிதாக பல கண்டுபிடிப்புகளை செய்து வருகின்றனர்.

அதே போல இந்த ஆண்டு வரும் ஜூலை மாதம் 3ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை படகு போட்டிகள் நடைபெற இருக்கிறது.ஒரு நாட்டில் ஒரு குழுவினருக்கு மட்டுமே இந்த வாய்ப்பை வழங்கி வரும் மொனாக்கோ நாட்டு அரசு பல்வேறு விதிமுறைகள் அடிப்படையில் இந்தியா சார்பில் பங்கேற்க தமிழ்நாடு கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியை சேர்ந்த 10மாணவர்களுக்கு போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
டீம் ஸிசக்தி என்ற பெயரில் யாலி 2.0 எனும் 280கிலோ எடை கொண்ட படகினை கரிம நார் மூலம் உருவாக்கப்பட்டு முற்றிலும் சோலார், பேட்டரி,ஹைட்ரஜன் பியூல் மூலம் இயங்கக்கூடிய படகை பொறியியல் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அறிமுகப்படுத்தினர்.
கடந்த ஆண்டு பேட்டரி, சோலார் மூலம் படகை உருவாக்கி இந்தியா சார்பில் முதல் முறையாக பங்கேற்ற இவர்கள் இந்த ஆண்டு இந்தியா அணி சார்பில் பேட்டரி, சோலார்,ஹைட்ரஜன் பியூல் என மூன்றில் இயங்க கூடிய படகை உருவாக்கியதன் காரணமாக இரண்டாவது முறையாகவும் போட்டியில் பங்கேற்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகமும் இவர்களை பாராட்டி வருகிறது.