கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை – அரசியல் தலைவர்கள் கருத்து .

1 Min Read
டிஐஜி விஜயகுமார்

கோவை சரக டிஐஜி  விஜயகுமார் தற்கொலை தொடர்பாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை,”கோவை சரக டிஐஜி  விஜயகுமார் ஐபிஎஸ் , துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது?

காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,”காவல்துறையை பணியாக நினைக்காமல் வாழ்க்கையாக நினைத்தவர்.  குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற அவர், தமக்கு இ.கா.ப தவிர வேறு எந்த பணியும் தேவையில்லை என்று கூறி கேட்டுப் பெற்றவர்.  காவல்துறையில் பணியாற்றும், காவல்துறையில் சேர விரும்பும் ஏராளமான  இளைஞர்களின்  நாயகனாக விளங்கியவர்.

காவல் அதிகாரி விஜயகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

வைகோ கூறுகையில்,”தமிழக காவல்துறையில், கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டு மாண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.

படித்துப் பட்டம் பெற்று, காவல்துறையில் உயர் பதவிக்கு வந்த விஜயகுமார் அவர்கள் எத்தகைய மன அழுத்தத்திற்கு ஆளானார் என்பதை யூகிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Share This Article
Leave a review