- கோவை வழக்கறிஞர் உதயகுமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கில் காவல்துறை விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த ராஜமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடந்துள்ள வழக்கில், கோவையில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் தன் மகன் உதயகுமார், கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி பொள்ளாச்சிக்கு செல்வதாக கூறி காரில் சென்றுள்ளார்.
இந்நிலையில் தொலைப்பேசி மூலம் அழைத்த செட்டிப்பாளையம் காவல் நிலைய காவலர் உதயகுமார் மயிலேறிபாளையம் அருகே இறந்து கிடப்பதாகவும், உடல் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய கோவை செட்டிப்பாளையம் காவல் ஆய்வாளர், பாஜக நிர்வாகிகள் சிலருடன் தொடர்பில் இருந்துவரும், நிதி நிறுவனத்திற்கு பணம் வசூல் செய்யும் வேலையை செய்து வந்தவருமான அய்யனார் என்ற செல்வத்திடம் இருந்து 30 லட்ச ரூபாய் பணத்தை பெற்று அதை நீண்ட நாட்களாக திருப்பி கொடுக்காததால், உதயகுமாரை காரில் அழைத்து சென்று கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக தகவல் தெரித்துள்ளார்.
தன் மகன் உதயகுமாரின் மரணத்திலும், காவல்துறையின் விசாரணையிலும் சந்தேகம் இருப்பதாலும், அரசியல் கட்சியினர் தொடர்பு இருப்பதாலும் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், கோவை காவல்துறை விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 21 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.