விருதுநகரில் மாவட்ட சிறை உள்ளது. இதில் 150 கைதிகள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இங்கு 255 கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு போதிய உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் சிறை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நேற்று நடந்த வாக்குவாதத்தில் கைதிகளுக்குள் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில் மூன்றாம் எண் அறையில் இருந்த கைதிகள் இருவருக்கிடையே தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறி அவர்களை வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்ய சிறை துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இன்று அதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில் விருதுநகர் மாவட்ட சிறையில் இருந்து 24 கைதிகளை மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பிற சிறைகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
மேலும் கைதிகளை சிறையில் இருந்து வெளியில் அழைத்து வந்து வாகனத்தில் ஏற்றும் தருணத்தில் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் வடிவேல் என்ற கைதி உட்பட மூன்று கைதிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், இந்த மேலும் ஒரு போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டதாகவும் சிறைத் துறையினர் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து கைதிகளை தனித்தனியாக பிரித்து நான்கு வாகனங்கள் மூலம் மதுரை திருநெல்வேலி உள்ளிட்ட சிறைகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த தகராறில் ஈடுபட்ட சிறை கைதிகள் முன்னதாக மதுரை மற்றும் பிற சிறைகளில் இருந்த போதும் இதே போன்ற தகராறுகளில் ஈடுபட்டதாகவும் சிரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.