ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது. ஜி-20 மாநாடு 32 இடங்களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திலும் மாநாடு நடைபெற்றது. உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் டெல்லி நகரை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சுவர்கள் அனைத்திலும் வண்ண வண்ண படங்கள் வரைதல், மரங்கள் வளர்த்தல், பூச்செடி வைத்தல், சாலைகள் சீரமைப்பு போன்ற பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
டெல்லி என்றாலே மத்திய அரசுக்கும், அம்மாநில அரசுக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது டெல்லியை அழகுப்படுத்துவதிலும் பா.ஜனதாவுக்கும், ஆம்ஆத்மிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசின் செலவில்தான் நகரம் புதுப்பொழிவாக ஜொலிக்க இருக்கிறது என்கிறது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், மத்திய அரசுதான் பணம் செலவழிக்கிறது என்கிறார் டெல்லி மாநில பா.ஜனதா தலைவர். இதனால் டெல்லியை அழகுபடுத்தும் பணியில் பணம் செலவழிப்பது யார்? என்பதில் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் டெல்லி மாநில பா.ஜனதா தலைவர் விரேந்த்ரா சச்வாடா கூறுகையில் ”டெல்லியில் ஜி-20 மாநாட்டிற்காக, நகரை அழகுப்படுத்தும் பணிகளை டெல்லி அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி செய்து வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் மத்திய அரசு வழங்கும் நிதியில் இருந்து செய்யப்படுகிறது” என்றார்.
இதற்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ”புதுடெல்லி நகராட்சி கார்பரேசன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் சாலைகள் தொடர்பான திட்டத்திற்கு மட்டும் மத்திய அரசு பணம் அளித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியால் செய்த வேலைகளை பா.ஜதான செய்தது என்று சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுப்பணித்துறை சாலைகளுக்கு அனைத்து பணமும் டெல்லி அரசின் பொதுப்பணித்துறையால் செலவழிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எம்.சி.டி. சாலைகள் பணிக்கான செலவை எம்சிடி செய்துள்ளது” என பதிலடி கொடுக்கப்பட்டது. இதற்கு சச்வாடா பதில் கூறுகையில் ”டெல்லியை அழகுப்படுத்துவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. மத்திய அரசு செய்த வேலைகளை ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவால் மந்திரிகள், தாங்கள் செய்ததாக பெயரை தட்டிச்செல்ல பார்ப்பது அவமான செயல்” என்றார். மேலும், “டெல்லியை அழகுப் படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செய்ததாக கெஜ்ரிவால் சொல்ல முடியுமா?” என சாவல் விட்டிருக்கிறார்.