பொதுமக்கள் பணம் சுமார் 44 லட்சத்துடன் தலைமறைவான இந்தியன் வங்கியின் சிந்தாமணி கிளை காசாளர் நேற்று நள்ளிரவு தனிப்படை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் . அவர் செலவு செய்து ரூபாய் 3000 ஆயிரம் போக மீதி பணத்தை காவல்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர் .
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் . இவர் விக்கிரவாண்டி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் இந்தியன் வங்கியின் காசாளாராக பணியாற்றி வருகிறார் .
இந்நிலையில் நேற்று முன்தினம் , வழக்கம் போல் பணிக்கு வந்த முகேஷ் தனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அருகிலிருக்கும் , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறி சென்ற முகேஷ் , நீண்ட நேரமாகியும் வங்கிக்குத் திரும்பவில்லை இதனால் சந்தேகம் அடைந்த சக வங்கி ஊழியர்கள் ,தங்களது வங்கி மேலாளர் பிரியதர்ஷினிக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .
வங்கி மேலாளர் பிரியதர்ஷினி வங்கியில் வசூலான பணத்தைக் கணக்கிட்ட பொழுது ரூபாய் 43 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மேலும் வங்கியிலிருந்த சிசிடிவி படக்கருவிகளைப் பரிசோதித்த போது , முகேஷ் வங்கியை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு வங்கி பணத்தை ஒரு பையில் அடுக்கி வைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது .

அவரது அலைப்பேசியும் அனைத்து வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் வங்கி மேலாளர் பிரியதர்ஷினி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார் புகாரைப் பெற்றுக் கொண்ட ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தார் .
முகேஷின் அலைப்பேசி சிக்னலை ஆய்வு செய்து காவல்துறை , முகேஷ் விழுப்புரத்திலிருந்து சென்னை திருவான்மியூருக்கும் , அங்கிருந்து பெங்களூருவுக்கும் , பின்பு பெங்களூருவிலிருந்து விழுப்புரத்திற்கும் பயணமாவதை கண்டுபிடித்தினார் . அவரை தொடர்ந்து விரட்டி சென்ற தனிப்படை காவல்துறை நேற்று நள்ளிரவு முகேஷை விழுப்புரம் புதிய பேரூந்துநிலையத்தில் கைது செய்தனர் . அவரிடமிருந்து 43 லட்சத்து 86 ஆயிரத்து 330 ரூபாய் பறிமுதல் செய்தனர் .
கடத்தல் நாடகம் அம்பலம் :
வங்கி காசாளர் முகேஷ் நேற்று முன்தினம் பணத்துடன் தப்பியோடிய நிலையில் தன்னை யாரோ கடத்திவிட்டதாகத் தனது சகோதரிக்கு வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை அனுப்பி இருந்தார், அதில் முகேஷ் தன்னை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்தி வைத்திருப்பதாகவும் தான் உயிருடன் திரும்புவதே சந்தேகம்தான் என்பன போல ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார் , இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அது ஒரு நாடகம் என்பதனை கண்டறிந்துள்ளனர் . காவல்துறை கவனத்தைச் சிதறடிக்கவே இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் .