சிந்தாமணி இந்தியன் வங்கி கிளையிலிருந்து 43 .86 லட்ச ரூபாய் அதன் வங்கி காசாளர் முகேஷ் திருடி சென்ற சம்பவத்தில் , பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது .
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் . இவர் விக்கிரவாண்டி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் இந்தியன் வங்கியின் காசாளாராக பணியாற்றி வருகிறார் .
இந்நிலையில் நேற்று முன்தினம் , வழக்கம் போல் பணிக்கு வந்த முகேஷ் தனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அருகிலிருக்கும் ,முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறி சென்ற முகேஷ் , நீண்ட நேரமாகியும் வங்கிக்குத் திரும்பவில்லை இதனால் சந்தேகம் அடைந்த சக வங்கி ஊழியர்கள் ,தங்களது வங்கி மேலாளர் பிரியதர்ஷினிக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .

வங்கி மேலாளர் பிரியதர்ஷினி வங்கியில் வசூலான பணத்தைக் கணக்கிட்ட பொழுது ரூபாய் 43 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மேலும் வங்கியிலிருந்த சிசிடிவி படக்கருவிகளைப் பரிசோதித்த போது , முகேஷ் வங்கியை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு வங்கி பணத்தை ஒரு பையில் அடுக்கி வைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது .
வங்கி மேலாளர் பிரியதர்ஷினி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார் புகாரைப் பெற்றுக் கொண்ட ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தார் .
நேற்று நள்ளிரவு முகேஷை கைது செய்த தனிப்படை போலீசார் அவரது வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியல் உறைந்தனர் .

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான முகேஷ் இந்த துணிகர திருட்டுச் சம்பவத்திற்கு முன்னதாகவே , முதியோர் உதவி தொகையிலிருந்து சுமார் 10 லட்ச ரூபாய் வரை கையாடல் செய்துள்ளார் என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது .
இதுகுறித்து தி நியூஸ் கலெக்ட் இணையத்திடம் பேசிய தனிப்படை அதிகாரி ” சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்ட மோகத்திற்கு அடிமையான முகேஷ் ,பல லட்சரூபாய் கடனாளியாகி இருக்கிறார் . மேலும் கடன் நெருக்கடியால் தான் வேலைசெய்த இந்தியன் வங்கியின் முதியோர் உதவி தொகை பணத்திலும் கையாடல் செய்து இருக்கிறார் .
குறிப்பாக கைபேசி முறையாக பயன்படுத்த தெரியாத முதியோர் பயனாளிகளை குறிவைத்த முகேஷ் அவர்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் முதியோர் உதவி தொகையினை அவர்களது அனுமதியில்லாமலே ரூபாய் 10 லட்சம் வரை கையாடல் செய்து சிறு கடன்களை சரி செய்துள்ளார் . அவரது முழுகடனையும் அடைக்கவே வங்கியிலிருந்து 43 .86 லட்ச ரூபாயை எடுத்ததாகவும், வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக , தனிப்படை அதிகாரி தெரிவித்தார் .