இந்திய – சீன எல்லையில் அமித்ஷா… கொந்தளித்த சீனா!

2 Min Read
அமித்ஷா

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக் கிராமம் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதியான கிபித்தூவில், ‘அதிர்வுமிக்க கிராமங்கள் திட்டத்தை’ அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். அங்கு அவர் பேசுகையில், 2014 ஆம் ஆண்டுக்கு முன், வடகிழக்கு பகுதி முழுவதும் குழப்பமான பகுதியாக அறியப்பட்டது, ஆனால் கடந்த 9 ஆண்டுகளில், பிரதமர் மோடியின் ‘கிழக்கைப் பார்’ கொள்கையின் காரணமாக, வடகிழக்கு தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் பகுதியாக கருதப்படுகிறது.

- Advertisement -
Ad imageAd image

’ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையான ITBP ஜவான்களும் நமது எல்லையில் இரவும் பகலும் உழைத்து வருவதால்,
இன்று நாடு முழுவதும் நிம்மதியாக அவரவர்கள் தங்கள் வீடுகளில் உறங்க முடிகிறது. எதிரிகளின் சிம்ம சொப்பணமாக நமது வீரர்கள் இருந்து வருகின்றனர்’ என்று பேசினார்.

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அருணாச்சலப் பிரதேச பயணத்தை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது. அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல எல்லையோர பகுதிகளை சீனா தங்களுடையது என சொந்தம் கொண்டாடி வருகிறது. அதன் காரணமாக இரு நாட்டு ராணுவ வீரர்களிடையேயும் மோதல் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றி அறிக்கை வெளியிட்டது.

சீன அமைச்சரவையின் மாநில கவுன்சில் வழங்கிய புவியியல் பெயர்கள் குறித்த விதிமுறைகளின்படி, அமித்ஷா தற்போது சென்றுள்ள கிபித்தூவை, “திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்” என்று அழைக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்திற்கான தரப்படுத்தப்பட்ட புவியியல் பெயர்களின் மூன்றாவது தொகுதி இதுவாகும். அருணாச்சலத்தில் உள்ள ஆறு இடங்களின் தரப்படுத்தப்பட்ட பெயர்களின் முதல் தொகுதி கடந்த 2017 இல் வெளியிடப்பட்டது. மேலும் 15 இடங்களின் இரண்டாவது தொகுதி 2021 இல் வெளியிடப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா, சீனா இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது இது முதல் முறை அல்ல, இதுபோன்ற முயற்சிகளை நாங்கள் விமர்சித்துள்ளோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். சீனா தனது சொந்த கண்டுபிடிப்புப் பெயர்களை வைப்பது அடிப்படை யதார்த்தத்தை மாற்றாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கடந்த வாரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் அமித்ஷாவின் அருணாச்சல் பிரதேசப் பயணம் சீனாவை எரிச்சலடைய செய்துள்ளது.

அமித்ஷா சீனாவின் நிலப்பரப்பிற்கு வந்துள்ளார். இது சீனாவின் பிராந்திய இறையாண்மையை மீறியது. மேலும் இத்தகைய நடவடிக்கைகள் எல்லைப் பகுதியில் அமைதிக்கு உகந்தது அல்ல என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review