ஏலகிரி மலையில் ஆங்கிலத்தை ஒழுங்காக படிக்காததால் குழந்தைகளை பிரம்பால் அடித்து அலர விட்ட ஆசிரியை. பெற்றோர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சி அத்தனாயூர் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 135 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அதே பள்ளியில் பணி புரிந்து வரும் ஆசிரியை ஜீவா ஆங்கிலப் பாடத்தை சரியாக படிக்கவில்லை என்கிற காரணத்தை கூறி சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை பிரம்பால் அடித்து காயப்படுத்தியதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவம் அறிந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் காயப்பட்ட சிறுவர் சிறுமிகளை மீட்டு அருகாமையில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஏலகிரி காவல் உதவி ஆய்வாளர் மணி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஆங்கில பாடத்தை ஒழுங்காக படிக்காத காரணத்தினால் ஆசிரியை அடித்து சிறுவர் சிறுமிகளை அலரவிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.