வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடத்தி செல்லப்பட்ட 3 நாள் ஆண் பச்சிளம் குழந்தை. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை காவல் துறையினர் 4 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மனைவி சூரியகலாவுக்கு (37). சூரியகலா பகுதி அளவு காது மற்றும் வாய் பேச முடியாதவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே சூரிய கலா, சுந்தர் தம்பதியினருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் கருத்தடை செய்வதற்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று மாலை 5.30 மணியளவில் பிரசவ வார்டுக்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், சூரியகலாவிற்கு சாப்பிட உணவு கொடுத்துள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் சூரிய கலா மயங்கினார். அதன்பின்னர் அப்பெண் குழந்தையை தூக்கிச் சென்றார்.
மயக்கம் தெளிந்ததும் அதிர்ச்சி அடைந்த சூரியகலா இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். மருத்துவமனைக்கு வந்த போலீஸார் விரைந்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி மற்றும் வெளியே உள்ள பல்வேறு சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் பெண்மணி ஒருவர் குழந்தையை தூக்கிக்கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. அவர் குழந்தையை தூக்கிக்கொண்டு திருவண்ணாமலை செல்லும் அரசு பேருந்தில் ஏறிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அந்த பெண்மணி காஞ்சிபுரம் பேருந்தில் ஏறியது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த வேலூர் தனிப்படை போலீஸார், குழந்தையை கடத்திய ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பத்மா என்ற பெண்மணியை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை எதற்காக கடத்திச் சென்றார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.