யூஜிசி-நெட் தேர்வு இரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், மாணவர்களின் தகுதிக்கான அளவுகோல் எனப் பொய்வேடம் தரித்த நீட் தேர்வு ஒரு மோசடி என்பதையும், ‘மாணவர்களுக்கு எதிரான – சமூகநீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான’ இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் மோசடிகளையும் கண்டிப்பதோடு, நீட் தேர்வு முறையை ஆதரிப்பதை ஒன்றிய அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்
யூஜிசி-நெட் தேர்வு இரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது.

இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வுகளாக இல்லாமல், கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணிகளாக அமைந்துள்ளன. இந்த முறைகேடுகள் வெளிவந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், தொழில்முறைப் படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத்தன்மை கொண்ட தேர்வுமுறையை ஏற்படுத்தி, பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதிசெய்து, உயர்கல்விக்கான அடிப்படையாக அதனை ஆக்கி, தொழில்முறைப் படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுத்து, அனைத்துக்கும் மேலாக, நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து சிறப்பான எதிர்காலத்துக்குத் திட்டமிடக் கைகள் கோப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.