Rapido : இளம் பெண்ணின்-பிறந்தநாளே இறந்தநாளான சோகம்..

2 Min Read
சேவிகா சாலை விபத்தில் உயிரிழந்தவர்

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சேவிகா . இவர் சென்னையில்  அண்ணா சாலையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் ஒப்பனை கலைஞராக பணிபுரிந்து வந்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இன்று சேவிகாவுக்கு பிறந்தநாள் என்பதால் நேற்று இரவு தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சேவிகா சென்னையில் உள்ள  தி.நகர் தலையாரி தெருவில் இருக்கும் தனது  தோழிகள் அறைக்கு சென்றுள்ளார். இரவு 12 மணி அளவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு அதிகாலை வேலையில் வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதாக தோழிகளிடம் கூறியுள்ளார்.

அதன் பேரில் வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்கு பைக் டாக்ஸியை புக் செய்துள்ளார். பைக் டாக்சி ஓட்டுனரான மேற்கு மாம்பலம் திருவள்ளுவர் சாலையை சார்ந்த ஆனந்தன்(34) என்பவருடன் ஹெல்மெட் அணியாமல் சேவிகா இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.

சரியாக அதிகாலை 4  மணி அளவில் அண்ணா சாலை காமராஜர் அரங்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத டிப்பர் லாரி பைக்  டாக்ஸி மீது மோதி வேகமாக சென்றுள்ளது. இதில் பைக்கில் சென்று கொண்டிருந்த இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளனர். பைக் டிரைவரான ஆனந்தனுக்கு கை கால்கள் உடம்பு என சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்ட நிலையில் சேவிகா என்ற பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்துள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்  வழியிலேயே சேவிகா பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பைக் டாக்ஸி டிரைவரான ஆனந்தன் என்பவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத டிப்பர் லாரியை சிசிடிவி காட்சி கொண்டு தேடி வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பைக் டாக்ஸி டிரைவரான ஆனந்தனிடம் பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது பிறந்த பிறந்த நாளில் சாலை விபத்தில்  உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக பைக் டாக்ஸி சேவையை அளித்து வரும் ரேபிடோவை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் ரேபிடோவில் பயணித்த பெண் ஒருவரின் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் (304 A) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review