ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அமித்குமார் பொடார் (46). இவர் திருச்சி கோட்டை பகுதியில் தங்கி தனியார் பேட்டரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2.12.2021ம் தேதி அன்று திருக்காட்டுப்பள்ளி – செங்கிப்பட்டி சாலையில் அமித்குமார் பொடார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் பசுபதிகோவிலை சேர்ந்த அந்தோணி லாயிஸ் என்பவர் ஓட்டி வந்த பைக் அமித்குமார் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து அமித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம்) நடந்து வந்தது. இந்த வழக்கை சிறப்பு மாவட்ட நீதிபதி எம்.வடிவேல் விசாரித்தார். மேலும் லோக் அதாலத்தில் இந்த வழக்கில் சமரச தீர்வு காணப்பட்டது. இதையடுத்து விபத்தில் இறந்த அமித்குமார் பொடார் வாரிசுதாரர்களான அவரது மனைவி மீனு (42), மகள்கள் சாரு (15) யாஷிகா (10) மகன் குணால் (6) அம்மா பிரபா (74) ஆகியோருக்கு நஷ்ட ஈடு வழங்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டது.

இதையடுத்து அமித்குமார் பொடார் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் வக்கீல் அமர்சிங்கிடம் ரூ.1.02 கோடிக்கான காசோலை சிறப்பு மாவட்ட நீதிபதி எம்.வடிவேல், விபத்து தீர்ப்பாய சிறப்பு சார்பு நீதிபதி தங்கமணி ஆகியோர் முன்னிலையில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவன வக்கீல் கிருஷ்ணசாமி வழங்கினார்.