- கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவ வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி விஷ சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 70 பேர் உயிரிழந்த நிலையில், 161 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுதொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் விற்பனை செய்தது, மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் விஷச்சாராயம் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் சடையன்,வேலு,
கவுதம் ஜெயின் ஆகிய மூன்று பேர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்கள் நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
சி பி சி ஐ டி போலீசார் சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, வேலு மற்றும் கௌதம் ஜெயின் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சம்பவத்தில் தொடர்புடைய 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், சம்பவம் தொடர்பான சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் முழுவீச்சில் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்…
விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் எனவே ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி தனபால் மூன்று பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.