குமரிக் கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் வளிமண்டல காற்று சுழற்சி நீடித்து வருவதால் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த அக்டோபர் மாதம் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. அக்டோபர் 20ம் தேதி முதல் நேற்று வரை இந்த பருவத்தில் இயல்பாக 30 சதவீதம் மழை பெய்ய வேண்டும். ஆனால் 25 சதவீதம் வரை மட்டும் தான் மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 16 சதவீதம் குறைவு.

இந்நிலையில் குமரிக்கடல் பகுதி மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளி மண்டல காற்று சுழற்சி நீடித்து வருகிறது. அதனால், தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக குலசேகரப்பட்டிணத்தில் 160மிமீ மழை பதிவாகியுள்ளது. சாத்தான்குளம் 120மிமீ, திருச்செந்தூர் 110 மிமீ, காயல்பட்டினம் 90மிமீ, காக்காச்சி,மாஞ்சோலை 80 மிமீ, கொடுமுடி ராதாபுரம், கடலாடி, நெல்லை 70மிமீ, களக்காடு, ஒட்டப்பிடாரம், நாங்குநேரி 60மிமீ, பாளையங்கோட்டை, மணியாச்சி சூரங்குடி, ராமேஸ்வரம், வாலிநோக்கம், தங்கச்சிமடம் 50மிமீ, சேரன்மகாதேவி, நம்பியார் அணை, முதுகுளத்தூர், ஸ்ரீவைகுண்டம் 40மிமீ மழை பெய்துள்ளது.

கடந்த 30 நாளில் இயல்பான அளவுக்கு பெய்ய வேண்டிய மழை 16 சதவீதம் குறைவாக பெய்துள்ள நிலையில், இனி வரும் மாதங்களில் ஏற்படும் காற்று நிலையின் வகைகளை பொருத்து மழையின் அளவு கணிக்கப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தலா 1 வளி மண்டல காற்று சுழற்சி கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வருகிறது. அதன் காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 26ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.