கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் செவலை ரோடு பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்தே புறாக்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் புதிதாக செவலை ரோட்டில் வீடு ஒன்று கட்டி அதன் மொட்டை மாடியில் புறாக்களுக்கு என கூண்டு அமைத்து வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளில் பல்வேறு வகையான புறாக்களை வளர்த்து வருவதை அறிந்து மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை 7.30 மணிக்கு அவரது வீட்டின் அருகாமையில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது ஏறி சுதாகர் வீட்டு மொட்டை மாடிக்கு வந்துள்ளார். சாக்கு பையை எடுத்து வந்து 30க்கும் மேற்பட்ட ஜோடி விலை உயர்ந்த ஃபான் டைல், கர்னபுறா உள்ளிட்ட 50,000 ரூபாய்க்கும் அதிகமான புறாக்களை சாக்குப் பையில் எடுத்துச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சிகள் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.