வி.சி.க தலைவர் திருமாவளவனை ஆதரித்து பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தன்னேரில்லா தமிழர், பெருஞ்சிறுத்தை என் தம்பி என்று புகழ்மாலை சூட்டியதோடு, சாதியம்தான் எனது எதிரி என்று பேசினார்.சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

“அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள், அவர்கள் அறிஞர்கள் கவலை மட்டும் படுவார்கள், நாங்கள் வீரர்கள் களம் கண்டே ஆக வேண்டும். என் கட்சிக்காரர்கள் என்ன அண்ணே, இந்த வாட்டி தியாகம் பண்ணிட்டீங்களே என்கிறார்கள். இது தியாகம் அல்ல, வியூகம். இவருக்கும் அதே பிரச்சனை வந்திருக்கும், எத்தனை வருஷமா தான் 2 சீட்டு 3 சீட்டு கேட்டு பார்ப்போமே. ஆனால், அது அல்ல இப்போதைய தேவை, களம் காண வேண்டியது தேவை. அதற்காக இங்கே அவரும் வந்திருக்கிறார், நானும் வந்திருக்கிறேன். நான் நல்லவேளை அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள் என்று நன்றி சொல்வது 25 வருடம் தாமதமாகச் சொல்கிறேன். நீங்கள் எல்லாம் வந்தே ஆக வேண்டும், அதனால் வந்திருக்கிறீர்கள். அதை புரிந்ததனால் தான், தன்னுடைய தொழில் வாழ்க்கை ஆதாரம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு 25 வருடங்களுக்கு முன்னாள் மக்கள் சேவை தேவை என்ற அவசரம் உணர்ந்து அன்றே வந்தவர். இன்று தாமதமாக நன்றி சொல்கிறேன்.
தனிப்பட்ட முறையில், அவரை நான் பலமுறை மெச்சி இருக்கிறேன், உங்கள் முன்னால் எனது சகோதரரை மெச்சுவதை எனக்கு பெருமையாக இருக்கிறது. இவருக்கு 60 வயது ஆகும்போது, பார்த்தால் தெரியாது, திருமா மணி என்று ஒரு மலர் வெளியிட்டார்கள். அந்த மலரில் என்னுடைய கட்டுரையும் இடம் பெற்று இருந்தது. அதில் இவருக்கு நான் ‘தன்னேரில்லா தமிழர்’ என்ற ஒரு தலைப்பை கொடுத்திருந்தேன். இன்று என்னை தூக்கத்தில் எழுப்பி போட்டோவை காட்டினாலும் அந்த வாக்கியம் தான் என் நினைவில் ஓடும்.

அப்படி நான் சொன்னது போல், தன் வாழ்வை மானுட சமுதாயம் பின்னோக்கி இழுக்கப்படும்போதெல்லாம் தன் அர்ப்பணிப்பு தேவை என்பதை உணர்ந்து தன்னை அர்ப்பணித்து கொண்டவர். மிகவும் தாழ்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அந்த வரிசையில் யார் இருந்தாலும் குரல் கொடுக்க தயாராக நிற்பவர். இவர் தன்னேரில்லா தமிழர், பெருஞ்சிறுத்தை என் தம்பி. இவருடைய ஆற்றல் மிக்க பேச்சும் இவருடைய ஞானமும் என்னை என்றும் கவர்ந்திருக்கிறது. என்றோ சொல்லி இருக்கிறேன், அமைப்பாய்த் செல்வோம் என்ற புத்தகம் எதிரிகளையும் ஜனநாயகப்படுத்துவோம் என்ற புத்தகம் நான் படித்து மகிழ்ந்தவை. எதிரிகளையும் ஜனாயப்படுத்துவோம் என்றால் எதிரி என்று யாரும் இல்லை என்று தான் பொருள்.” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்தேன். சாதியம் தான் எனது எதிரி, எனது வாழ்வில் சாதிக்கு இடமில்லை. மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் திருமாவளவன்” என்று பேசினார்.