- சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை துவங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கள் தொழில் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சங்கத்தின் எல்லன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நிறுவனத்தின் பெயரை தொழிற்சங்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது என சாம்சங் நிறுவனத்தின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் தங்கள் தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து தொழிற்சங்கத்தை பதிவு செய்து சான்று வழங்கும்படி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு கடந்த 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சாம்சங் நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் துவங்க அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டார். இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/it-has-been-raining-in-thanjavur-for-two-days-leaning-rice-paddies-in-the-field/
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசு, தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்..
இந்த நிலையில் நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று தொழிற்சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவக்குமார்,இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார். இதையடுத்து, நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்..