திருப்பூர் பாசி நிதி நிறுவன பெண் இயக்குனரை மிரட்டி பணம் பறித்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ஐ.ஜி. பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவை கோவை சிபிஐ நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது.
திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட 2009-ம் ஆண்டில் ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி, இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் திரும்ப வழங்கப்படவில்லை.

இதையடுத்து, முதலீட்டாளர்கள் அளித்த புகார் அடிப்படையில், திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என முதலீட்டாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிஐ நடத்திய விசாரணையில், 58,571 பேரிடம் ரூ.930.71 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனத்தின் பெண் இயக்குநர் கமலவள்ளியை கடத்தி பணம் பறித்ததாக அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பிரமோத் குமார் உட்பட 5 பேர் மீது சிபிஐ கடந்த 2011ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஐ.ஜி பிரமோத் குமார் உட்பட 5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றசாட்டுகளை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஐ.ஜி பிரமோத் குமார் தரப்பில் கடந்த வாரம் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, கூடுதல் பக்கங்கள் கொண்ட மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் ஐ.ஜி. பிரமோத் குமார் தரப்பில் நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஒரு வார கால அவகாசம் என்பதை மறுத்த நீதிபதி, நாளை மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.