பொங்கல் பண்டிகையின் போது போராட்டம் நடத்துவது தேவையானதா என போக்குவரத்து தொழிலாளர்களைப் பார்த்து கேள்வி கேட்டது சென்னை உயர்நீதிமன்றம் இன்று பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தியது. இதையடுத்து பஸ் ஸ்டிரைக் திடீரென நேற்று வாபஸ் பெற்றனர். இன்று முதல் பணிக்கு செல்வதாக தொழிற்சங்கங்கள் உறுதியளித்தன.
இந்த நிலையில் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக டிசம்பர் 19ம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.
அதன்படி கடந்த 9-ம் தேதி வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். எனினும் தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையே வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த பி. பார்ம் மாணவர் பால் கிதியோன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த போராட்டம் சட்டவிரோதமாக நடத்தப்படுகிறது. இற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தற்போது வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் ஆஜராகி, இந்த வேலை நிறுத்தத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள், ஊழியர்கள், பள்ளிகள் மற்றும், அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பொங்கல் திருநாளையொட்டி போராட்டம் நடத்துவது சட்ட விரோதமானது செயல் என்றார்.
அப்போது, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். பொங்கல் பண்டிகை வருகிறது. தொழிலாளர்களுக்கு போனஸ் உள்ளிட்ட சலுகைகளை அரசு தரவில்லை. அகவிலை படியை கூட அரசு தர மறுக்கிறது என்றார்.
இதேபோல், சி.ஐ.டி.யு சார்பில் வழக்கறிஞர் பாலன் அரிதாஸ், நேதாஜி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம் சார்பில் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி வாதிட்டனர். அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையிலும் பொங்கல் பண்டிகை வரும் நிலையிலும் திடீரென போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார். இதை கேட்ட நீதிபதிகள், பொங்கல் பண்டிகையின்போது இந்த ஸ்டிரைக் தேவையா என தொழிலாளர்களைப் பார்த்து கேட்டதுடன், கடந்த பல ஆண்டுகளாக இதே பிரச்னை நீடித்து வருகிறது. ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை தர அரசு முன் வருமா?. இது தொடர்பாக அரசிடம் கேட்டு மதியம் தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையடுத்து, வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன் நீதிபதிகளிடம், ஓய்வூதியதாரர்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 6-ம் தேதி முடிவு செய்யப்பட உள்ளது. ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக உள்ள கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால், வேலைக்கு திரும்ப உத்தரவிட வேண்டும் என்றார்.
அதற்கு நீதிபதிகள், போராட்டம் நடத்த தொழிலாளர்களுக்கு முழு உரிமை உள்ளது. அதே நேரத்தில் பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த போராட்டத்தை நடத்தலாமா? என்று தொழிற்சங்கங்கள் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து 92,000 ஊழியர்கள் ஓய்வூதியம் கேட்டு போராடுகின்றனர் அரசு ஏன் அதை கருத்தில் கொள்ளவில்லை. அரசும், தொழிற்சங்கங்களும் இந்த விஷயத்தில் முரண்டு பிடித்துவருகின்றன. இந்த தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குங்கள்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு அதை கணக்கிடலாமே என்று அரசு தரப்பிடம் கேட்டனர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், இது குடும்ப பிரச்னை, பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கில் உத்தரவு பிறப்பிக்க தொடங்கினர். அப்போது, சி.ஐ.டி.யு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வரும் 19-ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த சம்மதிக்கிறோம் என்றார். அண்ணா தொழிற்சங்கமும் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், போக்குவரத்து என்பது அத்தியாவசிய சேவை. பொங்கல் பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அதில் தடை ஏற்படுத்தி விட கூடாது. இந்த நேரத்தில் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, போராட்டத்தை வரும் 19-ம் தேதி வரை நிறுத்திவைக்க வேண்டும். தொழிலாளர்கள் நாளை (இன்று) பணிக்கு திரும்ப வேண்டும். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று முதல் பணிக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர். போக்குவரத்து என்பது அத்தியாவசிய சேவை. பொங்கல் பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அதில் தடை ஏற்படுத்தி விடக் கூடாது. இந்த நேரத்தில் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, போராட்டத்தை வரும் 19-ம் தேதி வரை நிறுத்திவைக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்ப வேண்டும்.