- ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 6 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா, முதல்வராக வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்ற கையோடு, மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மறுபுறம், தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
நேற்று கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்கு சுரங்கப்பாதையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை தீவிரவாதிகள் சிலர், பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஷோபியான் மாவட்டத்தில் பீகாரை சேர்ந்த தொழிலாளி சுட்டு கொல்லப்பட்டார். அதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல இரண்டு தொழிலாளர் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த தொடர் தாக்குதலையடுத்து நேற்று பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து ஏகே 47 ரக துப்பாகி, கை துப்பாக்கிகள், ஏராளமான தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “உளவுத்துறையின் தகவலையடுத்து பாரமுல்லா பகுதியில் நாங்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். எல்லை தாண்டி வந்த பயங்கரவாதி ஒருவர் பாரமுல்லாவில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேடுதல் பணியின் போது எங்களை நோக்கி பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டார், எனவே தற்காப்புக்காக தாக்குதல் நடத்தப்பட்டபோது அவர் உயிரிழந்தார்” என்று கூறியுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களின் கொலைக்கு பழிவாங்கவே, என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தொழிலாளர்கள் கொலை குறித்து முதல்வர் ஓமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-public-engaged-in-a-sapling-protest-demanding-the-repair-of-the-potholed-road/
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அமைப்பின் தலைவர் ஸ்ரீநகரில் மறைந்து வாழ்வதாகவும், அவர்தான் இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பில் ஆக்டிவாக உள்ள பயங்கரவாதிகளை ஏற்கெனவே பட்டியலிட்ட என்ஐஏ, அவர்கள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானத்தையும் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.