தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சியை 10 நாள் நடத்துவது என தீர்மானித்து கடந்த ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் தங்களது பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படும் படைப்புகளை விற்பனைக்கு வைத்துள்ளனர். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த புத்தகத் திருவிழா நடைபெற்றது. அதேபோன்று இந்த ஆண்டு இரண்டாவது ஆண்டாக விழுப்புரத்தில் புத்தகக் கண்காட்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தொடங்கியது.

நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு பேச்சாளர்களை அழைத்து உரை நிகழ்வும் நடக்கின்றது. அந்த வகையில் இன்று காலை சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாவட்ட ஆட்சியர் பழனி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தனர். அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பதிப்பகங்களாக சென்று பார்வையிட்டனர்.
இந்த அரங்கில் கலை, இலக்கியம், இலக்கணம், வரலாறு, புதினம், கவிதை, பண்பாடு அறிவியல், ஆன்மிகம், போட்டி தேர்விற்கான புத்தகங்கள், சரித்திரம், சமூக நாவல்கள் என அனைத்து வித புத்தகங்களும், குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஏற்ற வகையிலான புத்தகங்கள் இடம்பெற உள்ளது.
புத்தக கண்காட்சி தினங்களில், தினந்தோறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பல தனித்திறன் போட்டிகள், கலை நிகழ்ச்சி,
பட்டிமன்றங்கள் நடக்கவுள்ளது.
மாலையில் பல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம், சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், முக்கிய பிரமுகர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.
மேலும், வேளாண்மை, தோட்டக்கலை துறைகள் சார்பில் குறைந்த விலை மரக்கன்றுகள் விற்பனை செய்தல், குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.
பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பல போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், தங்களின் அறிவுசார்ந்த தேடலுக்கான களமாகவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கி தந்து நல்ல பழக்க வழக்கத்தை கற்பிக்கும் இடமாகவும் இந்த புத்தக திருவிழா அமையவுள்ளது.
விழாவில், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், உள்ளூர் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களின் தயார் நிலையில் உள்ள புத்தகங்களை வெளியிடவுள்ளது.இந்த புத்தக திருவிழாவிற்கு கட்டணங்கள் ஏதும் கிடையாது.