- சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக சார்பில் தாக்கல் செய்யபட்ட வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி ஆகிய தேதிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளது.
இந்தக் கார் பந்தயத்தை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் அமைதியான முறையில் நடத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த கார் பந்தயதுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளரான ஏ.என்.எஸ். பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கார் பந்தயம் நடத்தப்படும் போது அண்ணா சாலை, நேப்பியர் பாலம் மற்றும் சிவானந்தா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் என கூறியுள்ளார்.
பந்தயம் காரணமாக அன்றாடம் அந்த சாலையை பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்படுவர்கள் எனவும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கார் பந்தயம் நடத்துவது மோட்டார் வாகன விதிகளுக்கு முரணானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தாமல் அமைச்சர் உதயநிதி கார் பந்தயத்தில் கவனம் செலுத்துவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், வழக்கை இன்று அல்லது நாளை விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.