“தமிழ்நாட்டின் நிலப்பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். முதலாவது இடத்தில் திண்டுக்கல் மாவட்டம் உள்ளது. 6188 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 12 கோட்டங்கள் உள்ளது. திருவண்ணாமலை, ஆரணி இரண்டு மக்களவைத் தொகுதியில் தலா 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் மட்டும் ஒரு நாடாக இருந்திருந்தால், உலகின் 144வது நாடாக இருந்திருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாசு தெரிவித்துள்ளார்.
காரணம் அந்தளவுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் மக்கள் தொகை இருப்பதாக அவர் புள்ளி விவரங்களை கூறினார்.
மக்கள் தொகைப் பொருத்தவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் பேர் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மாவட்டமாக இருப்பதனால் தான் இன்னும் வளர்ச்சி பெறாமல் உள்ளது.
உதாரணத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையில் தூசி என்ற ஒரு கிராமம் உள்ளது. அந்த தூசி கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறும் ஐந்து கிலோமீட்டர் தான். ஆனால் தூசி கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றால் 115 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
இந்த மாவட்டத்தின் மேற்கு எல்லையிலிருந்து கிழக்கு எல்லைக்கு போக வேண்டும் என்றால் கிட்டதட்ட 168 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
இந்த மாவட்டத்தை நீண்ட காலமாக பிரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட கால கோரிக்கை, தமிழ்நாட்டில் உள்ள பெரிய பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்பது தான்.
அப்போதுதான் அந்த மாவட்டத்திற்கு வளர்ச்சி வரும். இதற்கு பல உதாரணங்கள் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உள்ளன. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல வாக்குறுதிகளை கொடுத்தார்கள. ஆட்சிக்கு வந்தால் மாவட்டங்களை பிரிப்போம் என்பது அவர்கள் கொடுத்த முக்கியமான வாக்குறுதி.

மருத்துவர் அய்யா அவர்களின் தொடர் முயற்சியால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் அரியலூர் பெரம்பலூர் மாவட்டம், அருகில் உள்ள வேலூர் மாவட்டம், ஒரு காலத்திலே வட ஆற்காடு மாவட்டம் என்று, இப்போது இருக்கின்ற திருவண்ணாமலை வேலூர் இணைந்து மிகப்பெரிய மாவட்டமாக இருந்தது. 1956-ல் தமிழகத்தில் வெறும் 14 மாவட்டங்கள் தான் இருந்தன. இன்று 38 மாவட்டங்கள் உள்ளது. இது போதுமானது கிடையாது.
அதேபோன்று விழுப்புரம் மாவட்டம் பெரிதாக இருந்தது. அதனைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கினோம்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி தென்காசி என்று பிரிக்கப்பட்டுள்ளது. இப்படி பெரிய பெரிய மாவட்டங்கள் பிரிப்பதற்கு காரணமே மருத்துவர் அய்யாவும் பாட்டாளி மக்கள் கட்சியும் தான். வேறு யாரும் கிடையாது.

இந்த கோரிக்கையை யாரும் வைப்பது கிடையாது. மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டம் வேண்டுமென எத்தனை போராட்டங்கள் நாம் நடத்தினோம், அதனால் இப்போது மயிலாடுதுறை மாவட்டம் வந்துள்ளது.
அந்த பகுதியில் இப்போது கும்பகோணத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.
இங்கே திருவண்ணாமலையை இரண்டாகப் பிரிக்க வேண்டும். வந்தவாசி, செய்யார், போளூர், ஆரணி, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், திருவண்ணாமலை, செங்கம் என எட்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதனை நான்கு நான்காக பிரிக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 24 லட்சம் பேர் வசித்து இருந்தார்கள்.
இப்போது இரண்டு மூன்று லட்சங்கள் ஏறி இருக்கும் 27 லட்சம் மக்கள் தொகை என்று வைத்துக் கொண்டால், இந்த மாவட்டம் ஒரு நாடாக இருந்தால், உலகத்தில் 195 நாடுகள் உள்ளன, அதில் இந்த மாவட்டம் உலகத்தின் 144 வது நாடாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு அவ்வளவு மக்கள் தொகை உள்ள மாவட்டம் இந்த மாவட்டம்.
ஏன் இந்த மாவட்டத்தை இன்னும் நீங்கள் பிரிக்காமல் இருக்கிறீர்கள்?
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்களுடைய கோரிக்கை தானே, வாக்குறுதி கொடுத்தீர்களே பிரிக்கணும் என்று? திருவண்ணாமலை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமாக கடலூர் மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும் திருவள்ளூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை இன்னும் பிரிக்க வேண்டும்.”