மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்ததாக எழுத்தாளரும் கிழக்கு பதிப்பக உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பெரம்பலூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். கும்பகோணத்தில் பிறந்தவர் பத்ரி சேஷாத்ரி. இவர் நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறார். இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். மணிப்பூர் கலவரம் குறித்த பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் இவர் கருத்து தெரிவித்திருந்ததாக தெரிகிறது.
இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் இவருடைய கருத்து இருந்ததால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்தார்.
அதன்பேரில் பத்ரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என
தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியதற்கு பத்ரி அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்ரியின் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி ஷேசாத்திரியை தமிழக போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று
கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக போலீசாரின் பணியா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.