எழுத்தாளர் உதயசங்கர் மற்றும் ராம் தங்கத்திற்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘ஆதனின் பொம்மை’ நாவலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கீழடி பற்றி இளையோர் அறியும் வகையில் எழுதப்பட்ட நாவலுக்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி என உதயசங்கர் நெகிழ்வு அடைந்துள்ளார்.
திருகார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்புக்கு எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. என்னுடைய சிறுகதை தொகுப்பிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்வாக உள்ளது என ராம் தங்கம் நெகிழ்வு அடைந்துள்ளார்.
இது குறித்து டிடிவி தனது டீவீட்டில்,”சிறார் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதான பாலபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் உதயசங்கர், யுவபுரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் ராம் தங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
குழந்தைகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் “ஆதனின் பொம்மை” என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் உதயசங்கர், சிறுவனின் பசியை விவரிக்கும் “திருக்கார்த்தியல்” என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ராம் தங்கம் ஆகியோரை வாழ்த்தி மகிழ்கின்றேன்.
எழுத்தாளர்கள் இருவரும் தமிழ் சிறார் இலக்கியத்துக்கு தொண்டாற்றும் வகையில் மேலும் பல படைப்புகளை எழுதி தேசிய விருதுகளைப் பெற வேண்டும் என்றும் இந்த நேரத்தில் பெருமிதத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.