தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பண்ணவையல் ரோடு பகுதியில் தொடர்ந்து மணல் கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் பல இடங்களில் போலீசார் சோதனையை மேற்கொண்டு வந்தனர் அந்த வகையில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார்கள் சரவணன் மற்றும் சதீஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த டாடா டர்போ வாகனத்தை ஆய்வு செய்ய முயன்ற போது வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதுடன் அங்கு பணியில் இருந்த காவலர்களின் மீது வாகனத்தை மோதி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த காவலர்கள் சரவணன் மற்றும் சதீஷ் காயமடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது கொலை செய்யும் நோக்கத்தோடு வாகனத்தை இயக்கி வந்தது தெரிய வந்ததையடுத்து வாகனத்தின் உரிமையாளர் ராஜா என்பவரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள டிரைவர் நிசாந்தை தேடி வருகின்றனர்.
மணல் கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவலர்களை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.