அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடத்த பொதுக்குழுவில் தங்களை நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றியது ,பொதுச்செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது,8 மாதங்களுக்கு தாமதமாக தொடரபட்ட வழக்குகள் என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் கடந்த 19ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அனைத்து தரப்பும் வாதங்களை முன்வைத்த பின்னர், வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை பொதுச்செயலாளர் தேர்தலின் முடிவை வெளியிட வேண்டாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து கடந்த 22ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளில் நீதிபதி கே.குமரேஷ்பாபு இன்று தீர்ப்பளிக்க உள்ளார்.