தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை நிறுவனத்தின் “பிரிட்ஜ் 23” கருத்தரங்கம், கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.
ஒரு ட்ரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மனித மூலதனத்தை உருவாக்குதல் என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 30,40 ஆண்டுகளில் இருந்த கல்வியில் கட்டமைப்பு மாற்றம் தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் தான் படிக்கும்போது 3000 லிருந்து 4000 பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே வெளியில் வந்தனர்,ஆனால் 2016-ல் பொறியியல் படிப்புக்கான 2,40,000 இடங்கள் இருந்த நிலையில் 1,60000 இடங்கள் நிரப்பட்டது.
கடந்த இரண்டு தலைமுறைகளாக 40 மடங்கு பொறியியல் பட்டதாரிகள் கூடுதலாக உருவாகியுள்ளனர் என அவர் தெரிவித்தார். அரசுக்கு மிகப்பெரிய இரண்டு பொறுப்புகள் இருக்கிறது, இந்த மாணவர்களுக்கு யார் பாடம் நடத்தினார்கள்? ஏனென்றால் தான் படிக்கும் போது 40 லிருந்து 60% மாணவர்கள் வெளிநாடு சென்று விட்டார்கள், ஏனென்றால் அப்போது பொறியியல் பட்டதாரிகளுக்கான தேவை அதிகமாக இருந்தது.
அப்போது தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகள் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தார்கள் எனவும் தற்போதும் எதிர்காலம் தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் பாடம் தொடர்பாகவும் தொழிற்சாலைகளின் தேவை அறிந்தும் தற்போது மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
தற்போது வெளியில் வரும் பொறியியல் பட்டதாரிகளுக்கு அனுபவமும் சம்பளமும் குறைவாக உள்ளது எனவும் இப்போதுள்ள மாணவர்கள் முதல் தலைமுறை பொறியியல் பட்டம் படிக்கிறார்கள், போதிய அனுபவம் இல்லாத ஆசிரியர்கள்,பெற்றோர்ரகள் பட்டதாரிகளாக இல்லாமல் இருப்பதன் காரணமாக மாணவர்களின் லட்சியம் குறைவாக உள்ளது எனவும் படித்து முடித்தால் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற எண்ணம் இருக்கிறது என தெரிவித்தார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, பொருளாதாரம் மதிப்பீடு செய்தல் மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் இருக்கிறது, அந்த வேலைக்கு என்ன மாதிரி தகுதி மற்றும் திறன்கள் தேவை, அந்த வேலைக்கு உண்டான ஊதியம் குறித்து அரசே ஆராய்ந்து செயல்படுத்தியது என தெரிவித்த பழனிவேல் தியாகராஜன், இந்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை அரசு, பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மாணவர்கள் அவர்களின் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலிருந்து கீழே வராமல், கீழிருந்து மேலே சென்றால் நமது வளர்ச்சி நன்றாக இருக்கும் எனவும் நிறைய தொழிலாளர்கள் திறமையானவர்களாக இருப்பதில்லை என்ற புகார்கள் வருகிறது, தொழிற்சாலைக்கு தேவையான தொழிலாளர்கள் இல்லாத காரணத்தால் சமநிலையின்மை நிலவி வருகிறது எனவும் அவற்றை கட்டமைப்பில் இருந்து சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 7000 காலி பணியிடங்களுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள் எனவும் அதற்கு பத்தாம் வகுப்பு தகுதியாக உள்ள நிலையில், சம்பளம் குறைவாக இருந்தாலும் பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள் எனவும் இதனால் திறமையானவர்கள் தங்கள் தகுதிக்கு குறைந்த வேலையை செய்கின்றனர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் ஒருங்கிணைந்த பாடத்திட்டமாக நாட்டின் பொருளாதாரம், பல்கலைங்களில் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஒருங்கிணைந்து வழங்கப்பட்டுவதாகவும், பட்டப்படிப்புக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் இருந்து ஊக்கத்தொகை வழங்கபடுவதால் மாணவர்களால் ஆராய்ச்சி செய்யமுடிகிறது.
வெளிநாடுகளில் இதை அரசே செயல்படுத்துகின்றன எனவும் இதை அரசும்,தொழிற்சாலைகளும் கல்விசாலைகளும் சேர்ந்து செயல்படுத்தினால் வேலைவாய்ப்புக்கு உதவியாக இருக்கும் எனவும் அவ்வாறான எண்ணத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு கழகம் ஆகியவை தொழிற்சாலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது எனவும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களில் பயிற்சி அளித்து அவர்களை தகுதியானவர்களாக மாற்றி உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு பெற்று தருவதற்கு உதவியாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் பெரிய இலட்சியத்தை ஏற்படுத்தி தோல்வி பயத்தை போக்கி நல்ல நிலையை அடைய வைப்பதற்கு உண்டான ஆலோசனைகளை வழங்க வேண்டும், தோல்வி என்பது சிறந்த அனுபவம் என்பதை உணர வைக்கும், தனக்கு சிறந்த அனுபவத்தை தோல்வி வழங்கி இருக்கிறது என தெரிவித்தவர் தான் இரண்டு நிறுவனங்களை விற்ற பிறகும் தோல்வியை கண்டு அஞ்சாமல் அனுபவமாக எடுத்துக்கொண்டு முன்னேறி வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பொருளாதார சந்தையில் மனித வளம் இருக்கும் வரை சந்தையின் தேவை இருக்கும் என தெரிவித்த பழனிவேல் தியாகராஜன் மனித மூலதனம், அரசு மற்றும் தொழில் இருக்கும் வரை பொருளாதார மேம்பாடு இருக்கும் என அப்போது குறிப்பிட்டார்.