தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் 17 மணி நேர சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை விசாரணைக்காக அழைத்து சென்ற நிலையில் அவரை கைது? செய்துள்ளாதாக கூறப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளை வாங்கித் தர சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர். பல ஆண்டுகளாக எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது.
இந்த வழக்குகளுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை செந்தில் பாலாஜி வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடங்கப்பட்டது. மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் செந்தில் பாலாஜி வீட்டுக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
நேற்று கரூர்,சென்னை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.நேற்று மதியம் 1.30 மணி முதல் தமிழ்நாடு தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறை சோதனை தொடங்கியது.நேற்று இரவு 10.30 மணியளவில் செந்தில் பாலாஜி வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரி கையில் கடிதம் ஒன்றை கொண்டு சென்றார். அந்த அதிகாரியுடன் ஏராளமான துணை ராணுவப் படையினரும் வந்தனர். நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்திலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இது தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் கைது தொடர்பாக தெரிவித்து அழைத்து சென்ற பிறகே தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி காரில் படுத்து அழுததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தின் மூத்த அமைச்சர்கள் மருத்துவ மணையில் குவிந்துள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கும் போது,இது ஒன்றிய அரசின் பழிவாங்கும் போக்கு நாங்கள் மிசா சட்டத்தையே பார்த்தோம் என தெரிவித்துள்ளார்.