ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பிருப்பதாக சொல்வதா? என அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழகில் தொடர்புள்ளதாக, கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த அருள், சிவசக்தி, தமாகவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 16 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
அடுத்தடுத்து பல ரவுடிகள் கைதாகி வரும் நிலையில், அவர்களுக்கு திமுக, பாஜக, அதிமுக போன்ற கட்சிகளின் பிரமுகர்களாக இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ரவுடிகள் பெரிய அளவில் திட்டம் தீட்டி இந்த படுகொலையை அரங்கேற்றியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூரைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி மணிகண்டனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
மணிகண்டன் மட்டுமின்றி ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த ஒருவர், வழக்கறிஞ்சர்கள் வேலாயுதம், பிரபாகரன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கும் தொடர்பிருப்பதாக சொல்வதா? என தேமுதிக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.