செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் கழிவுநீர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனந்தனின் கழிவு நீர் வாகனம் ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கழிவு நீரை ஏற்றிக் கொண்டு செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தை செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் நிர்மல் குமார் மற்றும் இளவரசன் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து லாரியின் ஓட்டுநரை மிரட்டி உரிமையாளரின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டு காவலர் நிர்மல் குமார் மாமுல் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
அதில், காவலர் நிர்மல் குமார் பேசுகையில், கழிவு நீர் வாகனத்தை வைத்துள்ளீர்கள் காவல் நிலையத்தில் யாரை பார்க்கிறீர்கள், உங்களுடைய வீடு எங்கு உள்ளது, வாகனம் ஓடும் போது தான் உங்களை பிடிக்க முடியும், புதிய போலீசோ, இல்லை பழைய போலீசோ, யாராக இருந்தாலும் பார்க்க வேண்டும். இன்று மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்.

மேலும் பேசிய போலீசார் நான் காவல் நிலையம் வந்து கடந்த இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை உன்னை பார்க்கவில்லை, எங்கு இருக்கிறாய் உடனடியாக உன்னை பார்க்க வேண்டும், நீ கழிவு நீர் வாகனத்தை வைத்து சம்பாதித்துக் கொண்டு இருந்தால் சுற்றும் நாங்கள் என்ன பைத்தியமா? என ஆனந்தனிடம் காவலர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், உனது வாகனத்தை ஆர்டிஓ அலுவலகத்திற்கு எடுத்து சென்று விடுவேன். என மிரட்டுவதும் போலீசார் பேசிய ஆடியோ பதிவில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஆனந்தன், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆடியோ பதிவுடன் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஆனந்தனை மிரட்டிய காவலர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், இந்த ஆடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அந்த ஆடியோ காவல்துறை பற்றிய புரிதல் மக்களிடையே முகம் சுளிக்க வைக்கிறது.
இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்
செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய காவலர்கள் நிர்மல் குமார் மற்றும் இளவரசன் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு
ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் கழிவு நீர் வாகனத்தை மடக்கி லஞ்சம் கேட்டு செல்போனில் பேசிய ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில் நடவடிக்கை