திருச்சி முப்பெரும் விழாவினை முழு வெற்றியடையச் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனக்குத் தானே மகுடத்தை சூட்டிக் கொண்டார். துரோகி என எடப்பாடி பழனிசாமியை சாடியுள்ளார்.
அறிக்கையில் அவர் கூறியதாவது,”அதிமுக தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டு செய்வதற்காக துவங்கப்பட்டது என்பதையும், ஜெயலலிதாவால் பாதுகாப்போடு வளர்க்கப்பட்டது என்பதையும், தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
தொண்டு என்பது சுயநலமின்றி பிறர் நலத்திற்காக உழைப்பது. தொழில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னலத்திற்காகச் செய்வது. தொழில் தொண்டாகலாம். ஆனால் தொண்டு தொழிலாகக்கூடாது. தொண்டைத் தொழிலாக்குவது துரோகத்திலும் துரோகம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் தொண்டு இயக்கத்தினை ஓர் ஆணவக் கும்பல், ஒரு சர்வாதிகாரக் கூட்டம் தொழிலாக்கிவிட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்; அந்த பதவிக்கு வருபவர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று எம்.ஜி.ஆர்- ஆல் வகுக்கப்பட்ட விதியை குழிதோண்டி புதைத்து, ஜெயலலிதாவை நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி ஒரு மாபாதகச் செயலை செய்து, தனக்குத் தானே மகுடத்தைச் சூட்டிக் கொண்டார் துரோகி.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் துரோகத்தை செய்த சர்வாதிகாரியை கண்டித்தும், விதியை மீளக் கொண்டு வரவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சதிகாரக் கும்பலிடமிருந்து மீட்டெடுக்கும் வண்ணமும் 24-4-2023 அன்று திருச்சியில் முப்பெரும் விழா நடைபெற்றது. என்னுடைய அறைகூவலை ஏற்று, முப்பெரும் விழாவில் அலைகடலென திரண்டு வந்து கலந்து கொண்ட இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.