- சிறுவனை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாடகர் மனோவின் மகன்களுக்கு முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 10 ஆம் தேதி இரவு மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரபிக் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலருக்கும் மனோவின் மகன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தனது நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர்களை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மனோவின் மகன்களின் நண்பர்களான விக்னேஷ் மற்றும், தர்மா ஆகியோரை கைது செய்தனர். ஆனால், சம்பவத்தன்று பாடகர் மனோவின் மகன்களை மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் சேர்ந்து உருட்டு கட்டை, கற்களை கொண்டு தாக்கும் காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தலங்களில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த மனோவின் மகன்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.