இளம் தலைமுறையினருக்கு தங்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ள உரிய வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டிய பொறுப்பானது பெற்றோர், ஆசிரியர், சமூகம், அரசு எனப் பலருக்கும் இருக்கிறது.
Good Touch, Bad Touch குறித்து பள்ளி பருவத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு சொல்லி தர வேண்டும். ஏனெனில் இள வயதில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல்கள் அதிகம் நடக்கின்றன.
பலருக்கு இதுபற்றி தெரிவதில்லை சிலர் மிரட்டப்பட்டு அச்சத்தில் மூடி மறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் .
இவை அனைத்தும் மன ரீதியாக மாணவ, மாணவிகளை பெரிதும் பாதிக்கின்றன. இதுதொடர்பான விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பதை ஆந்திர மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜூ என்னும் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் பழங்குடியின மாணவர்கள் படிக்கும் பள்ளி ஒன்றில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பயிற்சி அளிக்க சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில், Good Touch, Bad Touch குறித்து கற்று தரப்பட்டது இதை கற்றுக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரியவந்தது இத்தனை நாட்களாக தங்களிடம் ஆசிரியர்கள் சிலர் நடந்து கொண்ட விதம் Bad டச் என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றனர்.
பயிற்சியின் பொது மாணவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. Bad Touch சூழலை எப்போதாவது அனுபவித்து இருக்கிறீர்களா? எனத் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் ஒருவித பதற்றத்தில் இருந்ததை அறிந்த கொண்ட தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் உங்கள் அனுபவத்தை எழுத்துப்பூர்வமாக எங்களிடம் தெரிவிக்கலாம் எனக் கூறினர். அதில் உங்கள் பெயரை எழுத வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் அளித்த எழுத்துப்பூர்வ தகவல்களை படித்து பார்த்தால் 9 மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகள் தங்களுக்கு 5 ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களிடம் தவறான தொடுதலில் ஈடுபடடுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
இதுபற்றி உடனடியாக பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு தொண்டு நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் மாவட்ட கல்வி அதிகாரி சலீம் பாஷா மூலம் விசாரிக்க உத்தரவிட்டனர்.
அதன் பேரில் உள்ளூர் மண்டல கல்வி அதிகாரிகள், பெண் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் விரைந்து சென்று விசாரித்தனர் விசாரணையில் ஆசிரியர்கள் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது .
மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐந்து ஆசிரியர்களை உடனடியாக கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளில் மற்றம் காணப்பட்டால் அவர்களிடம் இயல்பாக பேசி அவர்களின் குறைகளை கேட்டுஅறிய வேண்டும் .
அவர்கள் பாலியல் ரீதியாக பாதிப்படைந்திருந்தால் உடனடியாக குழந்தைகளுக்காக பிரத்யேகமாக இயங்கும் சைல்ட்லைன் அமைப்பை 1098 என்ற ஹெல்ப்லைன் நம்பரை தொடர்புகொண்டு உரிய சட்ட உதவியை பெற்றுக்கொள்ளலாம் .