குறவர் குடியினர் மீது ஆந்திர காவல் துறையினரின்வெறியாட்டம்! -விசிக கண்டனம்

1 Min Read
திருமா

குறவர் குடியினர் மீது ஆந்திர பிரதேச மாநில காவல் துறையினரின் குரூர வெறியாட்டம் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்,”கடந்த சூன் – 11  அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள புலியாண்டப்பட்டியில் வசிக்கும் குறவர்குடியைச் சார்ந்த அய்யப்பன் என்பவரை ஆந்திர மாநிலம், சித்தூர் காவல்நிலையத்திலிருந்து வந்த காவல்துறையினர் திருட்டு வழக்கில் கைது செய்துள்ளனர். அதனைத் தட்டிக் கேட்ட அவரது குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து சித்தூருக்குக் கொண்டு சென்றுள்ளனர். அது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு இணையவழியாகப் புகார் செய்துள்ளனர். அதனால், ஆத்திரமடைந்த சித்தூர் காவல் நிலையத்தினர் மீண்டும் தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து மேலும் மூவரைக் கைது செய்துள்ளனர். மொத்தம் ஒன்பது பேரைக் கைது செய்து சித்தூர்  காவல்நிலையத்திலேயே வைத்து விசாரணை என்னும் பெயரில் குரூரமான வகையில் அரச வன்கொடுமையைக்  கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். குறிப்பாக,  பெண்களைத் துன்புறுத்தி வல்லுறவு வன்கொடுமைக்கு முயன்றுள்ளனர் என்றும்; அவர்தம் உயிர்நிலையில் மிளகாய்ப் பொடியைக் கொட்டி இழிநிலையில் வதைத்துள்ளனர் என்றும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டதன் பின்னர், அவர்களில்  இருவரைத் தவிர மற்றவர்களை விடுவித்துள்ளனர். மற்றவர்கள் சிறைப்படுத்தப்பட்டார்களா அல்லது அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்பதை இதுவரை தெரியவில்லை. எனவே, அவ்விருவரின் நிலையைக் கண்டறியவும், உயிருடனிருந்தால் அவர்களை மீட்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.  பெண்கள் மற்றும் சிறுவர் உள்ளிட்டோர் மீது பொய்வழக்குகள் புனையப்பட்டிருந்தால் அவற்றை விலக்கிட ஆவன செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுத்துகிறோம். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திட தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review