ஓட்டுனர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி நடத்துனர்களுக்கு வேலை வழங்க மறுப்பதா? அன்புமணி காட்டம் …

2 Min Read
அன்புமணி ராமதாஸ்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி  நடத்துனர்களுக்கு வேலை வழங்க மறுப்பதா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”சென்னையில் மாநகரப் போக்குவரத்துக்கழக பணிமனைகளில், மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கு போதிய எண்ணிக்கையில் ஓட்டுனர்கள் இல்லை என்று கூறி,  நடத்துனர்களுக்கு பணி மறுக்கப்படுவதாக  பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  ஒரு பணிமனையில் 15 பேர் வீதம் சென்னையில் உள்ள 24 பணிமனைகளிலும் 350-க்கும் கூடுதலானவர்களுக்கு  பணி மறுக்கப்படுகிறது.  இதன்மூலம் ஒவ்வொரு நாளும் குறைந்தது 350 மாநகரப் பேருந்துகள்  மக்களின் போக்குவரத்துக்காக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இது கண்டிக்கத்தக்கது!

பணி மறுக்கப்படும் ஓட்டுனர்களுக்கு, ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்பது தான் மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும்.  அதனால், பெருமளவிலான நடத்துனர்களுக்கு மாதத்திற்கு 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களுக்கு ஊதியம் மறுக்கப்படுகிறது.  ஒவ்வொரு நாளும் பணிக்கு வரும் ஓட்டுனர்களுக்கு பணி வழங்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. அந்தக் கடமையிலிருந்து நிர்வாகம் தவறினால், அதன் விளைவுகளை நிர்வாகம் தான் அனுபவிக்க வேண்டும். மாறாக ஓட்டுனர்களின் ஊதியத்தை பிடிப்பது நியாயமற்றது! 

நிர்வாகத்திற்கு நெருக்கமாக இருக்கும் ஓட்டுனர்களுக்கு  இரவு நேரங்களில் பணிமனைகளில் பேருந்துகளை எடுத்து ஒழுங்குபடுத்தும் எளிய பணி வழங்கப்படுகிறது.  இந்தப் பணிக்கு தேவையான ஓட்டுனர்களை விட பல மடங்கு ஓட்டுனர்களுக்கு இந்த பணி வழங்கப்படுவதாலும்,  அரசியல் செல்வாக்கு உள்ள ஓட்டுனர்கள் பணி செய்யாமலேயே பணி செய்ததாக கணக்குக் காட்டப்படுவதும் தான், பகல் நேரங்களில் ஓட்டுனர்கள் பற்றாக்குறைக்கு காரணம் ஆகும். நிர்வாகத்தின் ஒருதலைபட்சமான அணுகுமுறையால்,  நடத்துனர்களுக்கு மட்டுமின்றி, போக்குவரத்துக் கழகங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்!

மாநகரப் போக்குவரத்துக்கழகங்களில் மட்டுமின்றி, பிற போக்குவரத்துக் கழகங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. தொழிலாளர்களிடையே பாகுபாடு காட்டப்படக்கூடாது. அனைத்து வழித்தடங்களிலும், அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படுவதையும்,  அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும்  பணி மற்றும் ஊதியம் வழங்கப்படுவதையும் போக்குவரத்துக் கழகங்கள் உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகள் சுரண்டப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review