உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த முதியவர் பலியானார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். போலிசார் விசாரணை.அங்கு பெரும் பரப்பரப்பு.
கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ஞானமூர்த்தி வயது 37. இவர் திண்டிவனம் கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி வயது 33. இவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் நேற்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி காரில் புறப்பட்டனர். காரை ஞானமூர்த்தி ஓட்டினார். எலவனாசூர் கோட்டை புறவழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு கார், எதிர்பாராத விதமாக ஞானமூர்த்தியின் கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் இரண்டு கார்களின் முன் பகுதியும் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தில் மற்றொரு கார் டிரைவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருச்செங்கோடு அருகே கைலாச பாளையம் பகுதியை சேர்ந்த செங்கோடன் என்பவர், இவரது மகன் ஆறுமுகம் வயது 67 என்பவர், காரில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் காரில் பயணம் செய்த கார்த்திகேயன் வயது 30, ஞானமூர்த்தி, மகேஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெறிவித்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எலவனாசூர் கோட்டை போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட போது ஒரு காரில் இருந்து கியாஸ் கசிய தொடங்கியது. இது குறித்து அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கியாஷ் கசிவை நிறுத்தினர். இந்த விபத்து குறித்து எலவனாசூர் கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.