பிரபல நடிகரும் அரசியல்வாதிமான அமிதாப் பச்சனின் 81- வது பிறந்தநாள் இன்று.
அமிதாப் பச்சன் (பிறப்பு:அக்டோபர் 11, 1942) இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அமிதாப் ஹரிவன்ஷ் பச்சன் என்பதன் சுருக்கமே அமிதாப் பச்சன் என்பதாகும். இவர் ‘பிக் பீ’ மற்றும் ‘ஷாஹேந்ஷா’ என்ற செல்லப் பெயர்களாலும் அழைக்கப் பட்டார். 1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை உலகில் ‘கோபக்கார இளைஞன்’ எனப் பெயர் பெற்றுப் பிரபலம் அடைந்தார். மேலும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுள் ஒருவராக கருதப்பட்டார்.

அமிதாப் பச்சன் பிரபல திரைப்பட நடிகை ஜெய பாதுரியை திருமணம் செய்து கொண்டார். பச்சன் தம்பதிகளுக்கு ஷ்வேதா நந்தா மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருபிள்ளைகள் இருக்கின்றனர். மகன் அபிஷேக்கும் தந்தையைப் போலவே நடிகராக உள்ளார். அபிஷேக், நடிகையும் உலக அழகிப் பட்டம் வென்றவருமான ஐஸ்வர்யராயை மணந்துள்ளார்.
அமிதாப் பச்சன் தனது தொழில்வாழ்க்கையில் பற்பல சிறப்பு விருதுகள் வென்றுள்ளார். அதில் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், மற்றும் பன்னிரண்டு பிலிம்பேர் விருதுகள் போன்றவை அடங்கும். அதிலும் பிலிம்பேர் விருதுகளில், சிறந்த நடிகர் என்ற தேர்வுகளில் அதிக பட்ச எண்ணிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி, பின்னணிப் பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி அளிப்பவர் என நடிப்புடன் பன்முகங்களையும் வெளிப்படுத்தியவர். 1984-87 வரை இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார்.

இவர் கலைத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக 1984 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மசிறீ, 2001 இல் பத்ம பூசண், 2015 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் ஆகியவற்றை அளித்து கௌரவித்தது. திரைப்பட உலகிலும் அதற்கு அப்பாலும் இவரது தனித்துவமான வாழ்க்கைக்காக பிரான்ஸ் அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் அதன் மிக உயர்ந்த குடிமையியல் கௌரவமான நைட் ஆஃப் தி லெஜியன் ஆப் ஹானர் என்ற விருதை வழங்கியது.